யார் இந்த அனுராதா திவாரி? 'பிராமின் ஜீன்' சர்ச்சையைக் கிளப்பிய பெங்களூரு சி.இ.ஓ விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
இடஒதுக்கீடு அல்லது இலவசங்களால் தனது சமூகம் பயனடையவில்லை என்றும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் சாதித்திருப்பதற்காக பெருமிதம் கொள்ள அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்றும் வாதிட்டிருக்கிறார். திவாரியின் பதிவைச் அடுத்து, #BrahminGenes என்ற ஹேஷ்டேக் எக்ஸில் டிரெண்டாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராதா திவாரி 'பிராமின் ஜீன்' என்று குறிப்பிட்டு தனது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார். இது அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. எக்ஸில் அனுராதாவின் பதிவு 6.1 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
பலர் அவருக்கு ஆதரவளித்தாலும், மற்றவர்கள் ஜாதிவெறியை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் தனது பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டார் அனுராதா திவாரி. தனது பதிவில் "பிராமணர்" என்று குறிப்பிட்டது சர்ச்சைக்குக் காரணமானது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு அல்லது இலவசங்களால் தனது சமூகம் பயனடையவில்லை என்றும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் சாதித்திருப்பதற்காக பெருமிதம் கொள்ள அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்றும் வாதிட்டிருக்கிறார். திவாரியின் பதிவைச் அடுத்து, #BrahminGenes என்ற ஹேஷ்டேக் எக்ஸில் டிரெண்டாகியுள்ளது.
யார் இந்த அனுராதா திவாரி?
அனுராதா திவாரி பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் JustBurstOut என்ற கண்டென்ட் எழுதும் நிறுவனத்தை நிறுவியவர். TEDx பேச்சாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். திவாரி 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு தனித்துவமான தொழில்முனைவோர்களில் ஒருவராக இந்தியா டுடேயால் அங்கீகரிக்கப்பட்டார்.
அப்பல்லோ மருத்துவமனை, ரெயின்போ மருத்துவமனை, நாராயணா ஹெல்த், அமிட்டி யுனிவர்சிட்டி, கேர் மருத்துவமனை, அப்கிரேட், நாலெட்ஜ்ஹட் மற்றும் வேதாந்து உட்பட 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்களுக்கு திவாரி டிஜிட்டல் வளர்ச்சியை பற்றிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
திவாரி கோரா (Quora) தளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களையும் எக்ஸில் கிட்டத்தட்ட 60,000 ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த திவாரி, தொழில் முயற்சியில் இறங்குவதற்கு முன்பு மெக்கானிக்கல் இன்ஜினியராகப் பணிபுரிந்தார். பிறகு, JEE தேர்வு எழுதுபவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் TORQUIES என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
பின்னர் பெண்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் என்பவர்சிங் இந்தியன் வுமன் (EIW) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நிறுவினார்.