Loksabha election 2024 பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய்: யார் இவர்?
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான தொகுதி பங்கீட்டை முடித்துள்ள அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சி தனது நான்காவது வேட்பாளர் பட்டியலை நேற்று முன் தினம் வெளியிட்டது.
அதன்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடியை எதிர்த்து மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் களம் காண்கிறார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் 'பாகுபலி' என்று பிரபலமாக அழைக்கப்படும், 54 வயதான அஜய் ராய், 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடியிடம் தோல்வியடைந்தார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.
இந்த தோல்விகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் புத்துயிர் ஊட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
பூர்வாஞ்சலை சேர்ந்த அஜய் ராய், தனது அரசியல் வாழ்க்கையை பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) உறுப்பினராகத் தொடங்கியவர். 1996, 2002, 2007 தேர்தல்களில் பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தின் கோலஸ்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையடுத்து, 2009ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த அவர், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷியிடம் தோல்வியடைந்தார்.
யார் இந்த சுரேந்திரன்? ராகுலை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்!
அதன்பிறகு, 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அஜய் ராய், அந்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பிந்த்ரா (முன்னர் கோலாஸ்லா) தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். ஆனாலும், 2017, 2022 சட்டமன்றத் தேர்தல்களில் பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராய் களம் கண்டு வருகிறார். கடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், அவரது சாதிய பின்னணியின் காரணமாக, பிரதமர் மோடிக்கு வலுவான சவாலாக இருப்பார் என காங்கிரஸ் நம்புகிறது. அஜய் ராய், பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகம், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் செல்வாக்கும் அரசியல் பலமும் கொண்டது. பூர்வாஞ்சல் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பிராந்தியத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. இருப்பினும், உத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடியை எதிர்கொள்ளக்கூடிய வலுவான நபர் ஒருவர் வேண்டும் என்ற நிலையில், கட்சி விருப்பமாக அஜய் ராயே இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் அக்கட்சி 17 இடங்களில் போட்டியிடுகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.