லட்சத்தீவை காப்பாற்றிய முதலியார் சகோதரர்கள்; யார் இவர்கள்? வல்லபாய் பட்டேல் பின்னணியில் நடந்தது என்ன?
லட்சத்தீவில் என்ன இல்லை. பழமையான கடற்கரைகள் முதல் ஸ்நார்கெல்லிங் வரை தனது அனுபவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, ஸ்நார்கெல்லிங் என்னவென்று நெட்டில் மக்கள் தேடத் தொடங்கினர்.
லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்டு இருந்த பயணம் தற்போது உலகளவில் லட்சத்தீவு எங்கிருக்கிறது, எந்த நாட்டுக்கு சொந்தமானது, அதன் சிறப்புக்கள் என்னவென்பது பேச்சுப் பொருளாகி வருகிறது. பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார், ஜான் அப்ரஹாம், விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்தியாவுக்கு சொந்தமான லட்சத்தீவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
லட்சத்தீவு இன்று இந்தியாவின் சுற்றுலா கேந்திரமாக இருந்து வருவாயை ஈட்டி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் லட்சத்தீவை அபகரித்துக் கொள்ள பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தது. ஆனால், இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் அதிரடியாக களத்தில் இறங்கி லட்சத்தீவை இந்தியாவுடன் இணைத்தார். இல்லையென்றால் லட்சத்தீவும் இன்று பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு தீவாக மாறி இருக்கும்.
இந்தியா மாலத்தீவு : லட்சத்தீவில் பிரதமர் மோடி; வைரலான புகைப்படங்கள்; மாலத்தீவு அலறியது ஏன்?
லட்சத்தீவும் பாகிஸ்தானும்:
இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னர், துணைக் கண்டமானது, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரிந்தன. இந்த இரண்டு பகுதிகளிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் தான் இருந்தனர். இவை இல்லாமல் கேரளாவில் இருந்து 496 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் லட்சத்தீவில் 93 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தனர். துவக்கத்தில் இதன் மீது அக்கறை செலுத்தாத பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா பின்னாட்களில் லட்சத்தீவு மீதும் கவனம் செலுத்தினார்.
லட்சத்தீவு பின்னணியில் வல்லபாய் பட்டேல்:
இந்த நிலையில்தான் இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் நடந்த மன் கி பாத் நிகழ்வில் கூறி இருந்தார். ''இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஐதராபாத், ஜுனாகர் போன்ற பகுதிகளை மட்டும் இந்தியாவுடன் இணைக்கவில்லை, பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து லட்சத்தீவையும் காப்பாற்றினார்'' என்று மோடி தெரிவித்து இருந்தார்.
லட்சத்தீவில் மூவர்ணக் கொடி:
மேலும் பிரதமர் மோடி தனது பேச்சில், ''1947ஆம் பிரிவினைக்குப் பின்னர் லட்சத்தீவு மீது பாகிஸ்தான் கண் வைத்தது. தங்களது கொடியை ஏற்றிய கப்பலை லட்சத்தீவுக்கு பாகிஸ்தான் அனுப்பியது. இதுகுறித்து பட்டேலுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு அவர் ஒரு நிமிடம் கூட தாமதப்படுத்தவில்லை. கடலூரில் இருந்த முதலியார் சகோதரர்கள் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமணன் சாமி முதலியார் இருவரையும் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் பேசிவிட்டு, மக்களை திரட்டிக் கொண்டு லட்சத்தீவு சென்று மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக அவர்கள் இருவரும் இதை நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்தும் லட்சத்தீவை காப்பற்றும் அனைத்து பொறுப்புகளையும் முதலியார் சகோதரர்களிடம் வல்லபாய் பட்டேல் கொடுத்திருந்தார். அவர்களும் சாதுரியமாக செயல்பட்டு காப்பாற்றிக் கொடுத்தனர். இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு லட்சத்தீவு தனது பங்களிப்பை அளித்து வருகிறது. லட்சத்தீவு சிறந்த சுற்றுலா ஈர்ப்பு தளமாகவும் இருக்கிறது. லட்சத்தீவு செல்வதற்கு உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் '' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. மன் கி பாத் நிகழ்ச்சியில் இவர் பேசியதை தற்போது டிரன்ட் ஆக்கி வருகின்றனர்.
யார் இந்த ஆற்காடு சகோதர்கள்?
ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமணன் சாமி முதலியார் இருவரும் இரட்டை சகோதரர்கள். லட்சுமணன் சாமி முதலியார் சிறந்த மருத்துராக திகழ்ந்தவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் துணைவேந்தராகவும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் முதல்வராகவும் திகழ்ந்தவர் லட்சுமணன் சாமி முதலியார். இவர்கள் இருவரும் கர்னூலில் ஆற்காடு குப்புசாமி, சிதம்மா தம்பதிகளுக்கு மகன்களாகப் பிறந்தனர். ராமசாமி முதலியார் சட்டக்கல்லூரியில் படித்தவர். இவர் மைசூரின் 24வது திவானாக இருந்தார். ராமசாமி முதலியார் 1928 முதல் 1930 வரை சென்னையின் மேயராகவும் இருந்தார். இன்றும் இவர்கள் வரலாற்றில் போற்றப்படும் சகோதரர்களாக உள்ளனர்.