கேரள அரசின் மது விற்பனை கடையில் பெண்களுக்கு வேலை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் சென்வு சமத்துவத்துக்காக போராடி வெற்றிபெற்று, முதலாவது பெண் ஊழியராக ஷைனி என்பவர் ேநற்று பணிக்குச் சேர்ந்துள்ளார்.

திடீர் கூட்டம்

கேரளாவின் பரவூர் அருகே இருக்கும் புத்தன்வெளிக்கரா நகரில் இருக்கும் அரசு சில்லரை மது விற்பனைக் கடையில் ஷைனி(வயது43) பணிக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த கடையில் நேற்று வழக்கத்துக்கு மாறாக அதிகமான கூட்டம் இருந்த நிலையில், அங்கு பணியாற்ற வந்த முதல் பெண் ஊழியரான ஷைனியை வரவேற்கவே ஏராளமான கூட்டம் கூடி இருந்தது தெரியவந்தது.

அரசுத் தேர்வு

கேரள அரசுத் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதிய ஷைனி கடந்த 2010ம் ஆண்டு கேரள மதுபான கழகத்தின் பணிக்கு தேர்வு எழுதினார். 2012ம் ஆண்டு தேர்வு ஆணையத்தின் தரப்பட்டியல் வெளியானதில், 2 ஆயிரம் பேரில் பாதிபேர் பெண்களாக இருந்தனர். இதில் பெரும்பாலான பெண்களுக்கு கேரள மதுபான கழகத்தில் அலுவலகப் பணியும், சில பெண்களுக்கு மதுபானக் கழகத்தில் பணியும் ஒதுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு

இதையடுத்து, 2012ம் ஆண்டு ஷைனியும் மற்ற சில பெண்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்களுக்கு கேரள மதுபானக் கழகத்தின் பணி வழங்க உத்தரவிடக் கோரினர். இதில் ஷைனியுடன் தாக்கல் செய்த மற்ற பெண்களுக்கு வேறு அரசு வேலை கிடைத்ததால், அவர்கள் அங்கு சென்றனர். ஆனால், ஷைனிமட்டும் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தார்.

வெற்றி

கேரள நீதிமன்றத்தில் தனது பணிக்காக போராடிய ஷைனி, தனக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாலின சமத்துவ உரிமைக்கு எதிரானது, மதம், இனம், சாதி, இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற விஷயத்தை வலியுறுத்தினார். இதையடுத்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெண்களும் மதுவிற்பனைக் கடையில் பணியாற்றலாம் என அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஷைனி நேற்று பணியில் சேர்ந்தார்.

இது குறித்து ஷைனி கூறுகையில், “ இந்த பணி உத்தரவை வாங்க நான் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடினேன். இருந்தபோதிலும், இந்த பணி கிடைக்கும் முன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக பணியாற்றினேன். எனக்கு பணி வழங்க ஏற்பட்ட தாமதத்தை நினைத்து வருத்தப்படவில்லை. அனைத்து பெண்களின் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

 பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு சமத்துவம் இருக்க வேண்டும். இன்னும் 12 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றுவிடுவேன். ஆனால், எனது போராட்டத்தை மற்ற பெண்களும் பின்பற்றுவார்களே. என்னைத் தொடர்ந்து இன்னும் 7 பெண்களை மதுவிற்பனை கடையில் அமர்த்தப்போவதாக அரசு மதுபான கழக மேலாளர் தெரிவித்துள்ளார். இதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

நான் கடையில் விற்பனையாளராக இருப்பதைப் பார்த்து பலர் வியப்படைந்தனர். அதன்பின் என் கதையைக் கேட்டு பாராட்டிச் செல்கின்றனர். என் சக பணியாட்களும் நன்கு ஒத்துழைப்பு தருகின்றனர். நான் மது வகைகளை எடுக்க தயக்கம் காட்டி கணக்கு எழுதும் பணி செய்யாமல், அனைத்து வேலைகளையும் செய்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.