பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெறுவதற்கு அதிகமாக லஞ்சம் கொடுக்கும் மாநிலமாக, ஊழல் நிறைந்ததாக, நாட்டிலேயே   கர்நாடக மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது, முதல் 5 இடங்களுக்குள் தமிழகம் இருக்கிறது என்று அரசு சாரா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய ஊடக கல்வி என்ற அமைப்பு நாட்டில் அதிகமாக ஊழல் நடக்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக 20 மாநிலங்களை எடுத்துக்கொண்டது. நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் மக்களிடம் கருத்துக்களை கேட்டு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

இந்த ஆய்வில் கலந்து கொண்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக ஒரு ஆண்டுக்குள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுபவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை காலத்தில், அரசு அலுவலகங்களில் ஊழலின் அளவு குறைந்து இருந்தது என ஆய்வில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

20 மாநிலத்தைத் சேர்ந்த ஆய்வில் கலந்து கொண்ட மக்கள் அரசின் 10 வகையான சேவைகளைப் பெற நடப்பு 2017ம் ஆண்டில ரூ.6 ஆயிரத்து 350 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஊழலின் அளவு ரூ.20 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. 

மக்கள் அதிக லஞ்சம் கொடுக்கும் அரசு துறைகளில் 34 சதவீதம் இடம் பெற்று போலீஸ் துறை முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து நிலம் மற்றும் வீடு வசதித்துறை 24 சதவீதம், நீதிமன்ற சேவைகள் 18 சதவீதம், வரித்துறை சேவைகள் 15 சதவீதம், ரேஷன் கடைகள் 12 சதவீதமாக ஊழலில் இருக்கிறது.

மக்கள் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ரூ.10 முதல் 500 வரையிலும் அரசின் சேவைகளைப் பெற லஞ்சமாக கொடுக்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

20 மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசம், தமிழகம்,மஹராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் உள்ளன. ஆந்திர பிரதேசம், கர்நாடகம்,மஹாராஷ்டிரா, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஊழல் அளவு அதிகரித்துள்ளது.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் ஊழலின் அளவு குறைந்து வருகிறது.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.