கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் பலவும் குதித்துள்ளன. இந்தியாவிலும் இரண்டு விதமான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோவேக்ஸின் மனிதர்களிடன் பரிசோதனை கட்டத்தில் உள்ளது. எப்படி இருந்தாலும் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். “கொரோனாவுக்கு எதிராக சக்திவாய்ந்த தடுப்பூசியை உருவாக்குவதில் உலகிலேயே இந்தியாதான் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்ல, சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் இந்தியா தயாரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சர்வதேச கொரோனாவுக்கு எதிராக மருந்துகள் தயாரிப்பதில் இந்தியாதான் முக்கிய பங்காற்றி வருகிறது.


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். இந்தியா மிகப் பெரிய நாடு. அங்கே 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும். இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கூடினாலும், கொரோனா பரிசோதனைகளை இந்தியா நன்கு செய்திருக்கிறது. 2 கோடி மாதிரிகளை இந்தியா பரிசோதித்துள்ளது. தினமும் சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிறது. இதேபோது கொரோனா பரிசோதனை மையங்களும் இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.


ஒரே கவலை என்னவென்றால், இந்தியாவில் நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமப்புறங்களிலும் கொரோனா பரவுவதுதான். இந்தியாவில் இளைஞர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. எனவே, இந்தியா நோய் பரவலை தடுப்பது மட்டுமல்ல, தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மைக்கேல் தெரிவித்தார்.