அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில், ஜெய்ப்பூரில் ஒசாமா பெயரில் ஆதார் கார்டு பெற முயன்ற நபரை போலீசார் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டம், மண்டல் நகரில், ஆதார் கார்டு பதிவுசெய்யும் மையத்தை நடத்தி வருபவர் சதாம் ஹூசைன் மன்சூரி(வயது 25). இவர் சமீபத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் கார்டு பெற முயன்றார்.

ஆதார் கார்டு

இதற்காக ஒசாமா பின்லேடனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து,  அபாதாபாத், பில்வாரா மாவட்டம் என்ற பெயரில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த ஆதார் கார்டு (யு.ஐ.டி.ஏ.ஐ.) அதிகாரிகள் சந்தேகமுற்று, போலியானது என உறுதி செய்து போலீசில் புகார் செய்தனர்.

மேலும், மண்டல் நகரில் உள்ள அரசின் தகவல் தொழில்நுட்ப அதிகாரியும், இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மண்டல் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதாம் உசைன் மன்சூரியை கைது செய்தனர்.

போலி முகவரி

இது குறித்து பில்வாரா மாவட்ட போலீஸ் எஸ்.பி. சஞ்சல் மிஸ்ரா கூறுகையில், “ ஆதார் கார்டு பதிவு செய்யும் நிறுவனம் நடத்திய சதாம் உசேன் மன்சூரி,  ஒசாமா பினலேடன்  பெயரில் ஆதார் கார்டு பெற முயன்றுள்ளார். இதற்காக போலி முகவரியை அளித்துள்ளார். ஆனால், கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாளம், ஆவணங்களை அவர் பதவிவேற்றம் செய்யவில்லை.

விசாரணை

இது தொடர்பாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் மன்சூரி கைது செய்யப்பட்டார். மன்சூரி மீது தகவல்தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன் ஒசாமா பெயரில் ஆதார் கார்டு பெற முயன்றீர்கள் என விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

புகார்

மண்டல் நகரின் தகவல்தொழில்நுட்ப அதிகாரி சஞ்சய் அலுடியா கூறுகையில், “ டெல்லியில் உள்ள ஆதார் தலைமை மையத்தில் இருந்து ஒசாமா பின்லேடன் பெயரில் ஆதார் பெற முயல்வதாக சந்தேகம் அடைந்து என்னிடம் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நான் போலீசில் புகார் செய்து, உடனடியாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்தோம்’’ என்றார்.

மறுப்பு

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை சதாம் உசைன் மறுத்துள்ளார். யாரோ சிலர் இதைச் செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.  ஆனால், மன்சூரியின் அடையாள எண்ணை பயன்படுத்தியே விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.