ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம்கள் வாயிலாக கிடைக்க 3 மாதங்கள் ஆகலாம் என்று தெரிய வந்துள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் 25ம் தேதி ஆர்பிஐ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இது ஏடிஎம்களில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும், ஏடிஎம்களில் 200 ரூபாய் வழங்குவதற்கு இதுவரை எந்த கால நிர்ணயமும் செய்யப்படவில்லை என்றும் ஆர்பிஐ அறிவித்திருந்தது.

இது குறித்து சில வங்கிகள், தங்களது ஏடிஎம்களை பராமரிக்கும் நிறுவனங்களிடம், புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான வசதிகளை பரிசோதிக்குமாறு தற்போதுதான் அறிவுறுத்தியுள்ளது.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வழங்கும் வகையில், ஏடிஎம் தயாரிப்பு நிறுவனங்கள்,  தொழில்நுட்பத்தில் மாற்றத்தை மேற்கொண்டன.

இந்த நிலையில், தற்போது 200 மற்றும் புதிய 50 ரூபாய்களை ஏடிஎம்களில் வழங்கும் வகையில் அடுத்த மாற்றத்தை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏடிஎம் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், ‘‘200 ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐயிடம் இருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.

சில வங்கிகளிடம் இருந்து மட்டுமே, பல்வேறு அளவுகளில் புதிய ரூபாய் நோட்டுகளை கூடுதலாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துவது குறித்து பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது’’ என்றனர்.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2.25 லட்சம் ஏடிஎம்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வசதியை உருவாக்க வேண்டுமா என்பது கூட இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வழங்கும் வசதி குறித்து ஆர்பிஐயிடம் இருந்து உத்தரவு வந்த பிறகே அதற்கான பணிகள் முறைப்படித் தொடங்கும்.

எனவே, அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்து, ஏடிஎம்களின் பயன்பாடு பாதிக்காத வகையில் அவற்றை மாற்றியமைக்க 90 நாட்கள் ஆகும்.

இந்த மாற்றங்கள் செய்யப்படும்போது, வழக்கம் போல ஏடிஎம்கள் இயங்குவதையும், அதில் 100, 500, 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்யப்படும் என்று ஏ.டி.எம். தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.