மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சில் வெளியாகி இருந்த புரளியால் கோலாபூரில் இரண்டு குழுக்கள் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கோலாபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோலாபூரில் மூன்று இளைஞர்கள் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் ஆடியோ வைத்துள்ளனர். இந்த வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைரலானது. இதையடுத்து சிலர் தங்களுக்குள் கற்களை வீசிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைத்தவர் இளம் சிறார் என்று கூறப்படுகிறது.
வெளியாகி இருக்கும் ஆடியோவினால் தெருவிற்கு வந்து இரண்டு குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீசார் கோலாபூர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, '' மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது அரசின் கடமை. அமைதியாக இருக்குமாறு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
மோதலுக்கு காரணமான இளம் சிறார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திப்புசுல்தான் படத்தை வைத்து ஆட்சேபனைக்குரிய ஆடியோவை இணைத்து இருந்தது மோதலுக்கு காரணமாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. கோலாபூரில் பந்த் நடத்துவதற்கு சில அமைப்புகள் இன்று அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து சிவாஜி பார்க் அருகே பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது. கூட்டம் முடிந்து கலைந்து சென்று கொண்டிருந்தபோது, சிலர் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து போலீசார் கட்டாயப்படுத்தி அவர்களை அந்த இடத்தில் இருந்து நீக்கியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, எந்தவித அவதூறு பிரச்சாரங்களையும் நம்ப வேண்டாம் என்று கோலாபூர் மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
