பான் கார்டு - ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பான் கார்டு ஆதார் எண் இணைக்கும் கால அவகாசம் முடிந்துள்ளது. இந்த இரண்டையும் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் பான் கார்டும், ஆதார் எண்ணும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு சேவைகளை பெறுவது உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிச் சேவைகள், வருமான வரி செலுத்துவது, பணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற பான் கார்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் வருமான வரிச் சட்டம் ஜூலை 1, 2017 முதல் அமலுக்கு வந்தது. அதன்பிறகு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காலக்கெடுவிற்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான அபராதம் விதிக்க வழிவகை செய்யும், பிரிவு 234H-ஐ 2021 பட்ஜெட்டில் மத்திய அரசு சேர்த்தது. அதன்படி, மார்ச் 31, 2022 வரை பான் - ஆதார் இணைக்க அபராதத் தொகை எதுவும் இல்லை. இருப்பினும், ஏப்ரல் 1, 2022 முதல் இரண்டு வகையாக அபராதம் விதிக்கப்பட்டது. பிரிவு 234H இன் படி, ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 2022 வரை ஆதாருடன் பான் எண்ணை இணைத்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஜூலை 1, 2022 பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2023 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவை வருமான வரித்துறை ஜூன் 30, 2023 வரை மூன்று மாதங்கள் நீட்டித்தது. அதன்படி, ஜூன் 30ஆம் தேதியுடன் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. இந்த காலக்கெடுவானது மேலும் நீட்டிக்கப்படுமா என்பதை வருமான வரித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.
அஜித் பவார் கைக்கு செல்லும் என்சிபி? சிவசேனா போல் நடக்க வாய்ப்பு!
அதேசமயம், ஜூன் 30, 2023க்குள் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், பான் எண் செயலிழந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பான் செயலிழந்தவுடன், வருமான வரியை செலுத்துவது, வருமானம் மற்றும் செலவினங்களில் அதிக டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ், வங்கி எஃப்டிகள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய முடியாதது போன்ற விளைவுகள் ஏற்படும்.
இதனிடையே, பான்-ஆதார் இணைப்பதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன. பான் கார்டு, ஆதார் கார்டுகளில் இருக்கும் தகவல்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்கும் நபர்களால் பான் - ஆதாரை இணைக்க முடியவில்லை. இதனால், அவர்கள் ஏதேனும் ஒன்றில் விவரங்களை திருத்தி அதன்பிறகே அபராதத்துடன் இணைத்து வந்தனர். ஒரு சிலரோ, அபராத்தொகை செலுத்தியும் பான்-ஆதார் இணைக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். அதாவது, ஆதாருடன் பான் எண்ணை இணைத்ததற்காக அபராதம் செலுத்திய நபர்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 30, 2023 வரை இரண்டுமே இணைக்கப்படாமல் உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வருமான வரித்துறை, இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அவை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பான் எண்ணை செயலிழக்கம் செய்யும் முன்னர் இவை பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல், பான் எண் - ஆதார் எண் இணைக்கவில்லை என்றால், வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.