சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் அதிகம் ஜெயிச்சி ஆம் ஆத்மிக்கு என்ன யூஸ்.? மேயர் பதவியை அலேக்காக தூக்கிய பாஜக.!
பாஜக மேயர் வேட்பாளருக்கு 14 வாக்குகள் கிடைத்தன. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 வாக்குகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்த போதும், மேயர் மறைமுகத் தேர்தலில் அப்பதவியை பாஜக கைப்பற்றியது.
பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும் சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசம் ஆகும். அங்கு சண்டிகர் மாநகராட்சிக்கு டிசம்பர் 24 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 60.4 சதவீதம் வாக்குப் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 27 அன்று எண்ணப்பட்டன. சண்டிகர் மாநகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் அதிகபட்சமாக ஆம் ஆத்மி கட்சி 14 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 12 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது.
இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் (கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வது) இன்று நடைபெற்றது. சுழற்சி முறையில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சு கத்யால், பாஜக சார்பில் சரப்ஜித் கவுர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இத்தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இன்று மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் சார்பில் கவுன்சிலராகத் தேர்வான ஹர்பிரீத் கவுர் பாப்லா பாஜகவில் சேர்ந்தார். மேலும் தற்போது மேயராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்தவரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் பாஜக மற்றும் ஆம் ஆத்மி என இரு கட்சிகளுக்கும் தலா 14 கவுன்சிலர்கள் எண்ணிக்கையுடன் சம பலத்தில் இருந்தன.
எனவே, தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேயர் தேர்தல் முடிந்த பிறகு, பாஜக மேயர் வேட்பாளருக்கு 14 வாக்குகள் கிடைத்தன. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 வாக்குகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்தும் பாஜகவைக் கண்டித்தும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். மாநகராட்சியில் தனிப் பெரும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்தபோதும், மேயர் தேர்தலில் தோல்வியடைந்தது அக்கட்சியை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.