What is the penalty for Lalu Prasad Yadav in the corruption case?
ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் 1977-ம் ஆண்டு 29 வயதில் எம்பியாக பதவியேற்றார்.
1990 ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.
அவர் இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்றபோது, கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2½ மாதங்களில் லாலு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.
இதைதொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த ஊழலில் தொடர்புடைய 15 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதுகுறித்த தீர்ப்பு விவரம் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு விவரங்கள் வெளியாகியது.
