ஆந்திரா ரயில் விபத்து: என்ன காரணம்?
ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தினால் ஏற்பட்ட சோகம் இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல்கள் கோளாறு, அலட்சியம் உள்ளிட்ட மனித தவறுகளே காரணம் என்று கூறப்படும் நிலையில், ஆந்திரா ரயில் விபத்துக்கும் மனித தவறுகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மனிதப் பிழை காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதியிருக்கலாம் என கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது, “மனித தவறு. சிக்னலை மீறியது உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.” என கிழக்கு கடற்கரை ரயில்வே CPRO பிஸ்வஜித் சாஹூ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆந்திரா ரயில் விபத்து: சம்பவ இடத்துக்கு நேரில் செல்லும் ஜெகன் மோகன்!
விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலானது ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மோதி வீபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வால்டேர் டிவிஷன் ரயில்வே மேலாளர் சௌரப் பிரசாத் கூறுகையில், “நடுவே செல்லும் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் சென்று கொண்டிருந்தன. பின்பக்கமாக வந்த ரயில் சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதில் முன் ரயிலில் மூன்று, பின் ரயிலில் இரண்டு என மொத்தம் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன.” என்றார்.