ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: அப்படியென்றான் என்ன?
ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்வதற்கான உலகளாவிய டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது
இந்தியாவில் தற்போதுள்ள ஃபாஸ்ட் டேக் முறையுடன் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு புதுமையான மற்றும் தகுதி உள்ள நிறுவனங்களிடமிருந்து உலகளாவிய டெண்டருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ள நிறுவனங்கள், tender@ihmcl.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஜூலை 22ஆம் தேதியன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்துவது தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரின் சுமூகமான, தடையற்ற பயணத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஃபாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறையில் மாற்றம் கொண்டு வந்து ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் Global navigation satellite system அடிப்படையிலான மின்னணு முறையில் சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (இடிசி) முறையை முதலில் தேசிய நெடுஞ்சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மின்னணு கட்டண வசூல் அமைப்பான FASTags பயன்படுத்தப்படுகிறது, இதில் 'ரேடியோ அதிர்வெண் அடையாள' (RFID) தொழில்நுட்பம் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படுகிறது. வாகனங்களில் உள்ள டேக்கில் இருக்கும் RFID தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு முறையில் நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வாகனங்களில் உள்ள நம்பர் ப்ளேட்டை அடையாளம் காணுவதன் மூலம், வங்கிக் கணக்குகள் இருந்து இந்த முறை மூலம் சுங்கக் கட்டணம் கழிக்கப்படும். நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்ட தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் (ANPR) கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் அடையாளம் காணப்படும்.
ராஜினாமா செய்ய வேண்டாம்: தேவேந்திர பட்நாவிஸிடம் கேட்டுக் கொண்ட அமித் ஷா!
தற்போதைய FASTags அமைப்பு, ஸ்கேனரைக் கொண்ட டோல் பிளாசாவில் மின்னணு முறையில் பணம் செலுத்த உபயோகிக்கப்படுகிறது. ஜிஎன்எஸ்எஸ் அமைப்பை பொறுத்தவரை ANPR தொழில்நுட்பத்தால் அளவிடப்படும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் கழிக்கப்படும், இதனால் டோல் பிளாசாக்கள் தேவையற்றதாக இருக்கும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது சுமார் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான கட்டணத்தை சுங்கச்சாவடி மூலம் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது அடுத்த 2-3 ஆண்டுகளில் ரூ.1.40 டிரில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.