இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பதந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பது குறித்து பார்க்கலாம்.

What is the Simla Agreement?: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் பின்னணியில் இருக்கலாம் என்று கருதிய இந்தியா அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்களுக்கான விசாவை முழுமையாக ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுடன் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான் 

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் பொங்கி எழுந்த பாகிஸ்தான், இந்தியாவின் செயல் போருக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுததுள்ளது. இந்தியாவுக்கு எதிரான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர முக முக்கியமாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?

இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. சிம்லா ஒப்பந்தம் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1972ம் ஆண்டு போடப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம் ஆகும். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிப்பதே சிம்லா ஒப்பந்தம் ஆகும். 1972ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் போர் முடிந்த பிறகு கையெழுத்து

பாகிஸ்தானைப் பிரிப்பதற்கும் அதன் விளைவாக வங்கதேசம் உருவாவதற்கும் வழிவகுத்த 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் முடிவடைந்த 8 மாதங்களுக்குப் பிறகு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதை உறுதி செய்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.

சிம்லா ஒப்பந்தம் ரத்து! அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்! இந்திய விமானங்கள் பறக்க தடை! பாகிஸ்தான் பதிலடி!

சிம்லா ஒப்பந்தத்தில் என்னென்ன உள்ளன?

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை ஐ.நா.வின் சாசனம் நிர்வகிக்கும். எந்தவொரு வேறுபாடுகளும் அமைதியான வழிமுறைகள் மூலமாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டும். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும், ஒன்றுக்கொன்று உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது. சர்வதேச எல்லையில் பரஸ்பரம் படைகள் திரும்பப் பெறப்படும். மிக முக்கியமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு ஊடுருவக் கூடாது.

சிம்லா ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் 

ஆனால் சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் சமாதானத்துக்கு கைகொடுக்கவில்லை என்பதே உண்மை. சிம்லா ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு 1980ம் ஆண்டு சியாச்சின் பனிப்பாறை மோதல் உண்டானது. 1999ம் ஆண்டு கார்கில் போர் உருவானது. அதன்பிறகு பல நேரங்களில் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளது. 

சிம்லா ஒப்பந்தம் ரத்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இப்போது சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் அபாயம் உருவாகி இருக்கிறது. சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் இனி வெளிப்படையாக ஜம்மு காஷ்மீரை தங்களுக்கு சொந்தமாகிக் கொள்ள முயற்சிக்கும். பேச்சுவார்த்தையை முழுமையாக மதிக்காது. இதனால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு அதிகரிக்கும். இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும்.

திடீரென ஆங்கிலத்தில் பேசிய மோடி! உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எச்சரிக்கை!