மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது என்றும் குற்றவாளிகள் தப்பமாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த சூழலில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று வெளியானது. ஒரு கும்பல் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அந்த 2 பெண்களும் பழங்குடியின பெண்கள் என்றும், அவர்கள் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மணிப்பூர் கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ராஜஸ்தான் அல்லது மணிப்பூரின் சத்தீஸ்கர் அல்லது நாட்டின் எந்த மூலையில் நடந்த எந்தச் சம்பவமாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.என் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன், எந்த குற்றவாளியும் தப்ப மாட்டார்கள். சட்டம் தனது முழு வலிமையுடன் தன் கடமையை செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.” என்று தெரிவித்தார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். மணிப்பூர் பெண்கள் விவாகரம் குறித்தும், காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமித்ஷா கேட்டறிந்தார்.
