கொல்கட்டாவில் கலவரத்தால் சேதமான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்னும் சமூக சீர்திருத்தவாதியின்  சிலையை அமைக்க மேற்குவங்க அரசிடம் போதுமான பணம் உள்ளது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொல்கட்டாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணி நடத்தினார். அப்போது பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில், மேற்குவங்கத்தின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளும் மாறி மாறி பரஸ்பரம் குற்றம்சாட்டை முன்வைத்து வந்தனர். 

இந்நிலையில் உத்திரபிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கொல்கத்தாவில் வன்முறையின்போது உடைக்கப்பட்ட தத்துவமேதை வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு பாஜவின் பணம் எதற்கு? மேற்கு வங்கத்திடமே போதுமான வளம் இருக்கிறது. 

மேலும் சிலைகளை சேதப்படுத்துவது பாஜகவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவிலும் இதைத்தான் செய்தார்கள். பாஜக மேற்குவங்கத்தின் 200 ஆண்டு பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற கட்சியை ஆதரிப்பவர்களை சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியாக செய்திகளை பரப்பி பாஜக வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கிறது” என்று பேசியுள்ளார்.