விடுப்பு மறுக்கப்பட்டதால் அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் எங்கே நடந்தது? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவை சேர்ந்தவர் அமித் குமார் சர்க்கார். இவர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள கரிகாரி பவனின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த அமித் குமார் சர்க்கார், சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக ஊழியர்களான ஜெயதேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகியோரை திடீரென குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த 4 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற அமித் குமார் சர்க்கார், இரத்தக்கறை படிந்த கத்தியுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விடுப்பு மறுக்கப்பட்டதால் அவர் சக ஊழியர்களை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
அதாவது விடுமுறை எடுப்பது தொடர்பாக அமித் குமார் சர்க்காருக்கும், சக ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அமித் குமார் சர்க்காருக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் 4 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சென்றபோது போலீசிடம் சிக்கியுள்ளார். ''அமித் குமார் சர்க்காருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவுக்கு பிறகே முழுமையான விவரம் தெரியவரும்'' என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமித் குமார் சர்க்காருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, சக ஊழியர்களை கத்தியால் குத்திய அமித் குமார் சர்க்கார் ரத்தக்கறை படிந்த கத்தியுடன், முதுகில் ஒரு பையையும் கையில் ஒரு பையையும் ஏந்தியபடி நடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருந்தது. சாலைகளில் சென்று இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து செல்போனில் படம்பிடித்தனர். அப்போது அவர்களையும் அமித் குமார் சர்க்கார் மிரட்டும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
