வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்: இதுதான் அந்த திட்டம் - ராகுல் காந்தி!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தின் மூலம் ‘வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டு யாத்திரைகளை நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, விவசாயிகள், பெண்கள், இளைனஞர்கள், தொழிலாளர்கள், அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சி ஆகிய பிரிவுகளின் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகை!
இந்தநிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தின் மூலம் ‘வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அனுப்கார் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், “வறுமை ஒரே அடியில் ஒழிக்கப்படும்” என்றார்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அவர்களின் கணக்கில் வருவதை காங்கிரஸ் அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார். “நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திலும் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு காங்கிரஸ் அரசு ரூ. 1 லட்சத்தை வழங்கும். நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் (மாதம் ரூ. 8,500) ) உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் வறுமை ஒரே அடியில் ஒழிக்கப்படும்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.