கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வழிகின்றன.

இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால்  இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன்  மற்றும் சிவ கார்த்திகேயன் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாயும். நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர்  நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.

கனமழையால் கேரள மாநிலத்துக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சென்ற வாரம் 100 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது.

இன்று கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி உடனடியாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள சகோதரர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த உதவிகளை மேற்கொள்வதற்காக ஒரு கமிட்டி ஒன்றையும் அமைத்து அதிபர்  உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டின் Emirates Red Crescent  அமைப்பின் தலைவரும்,  சில மனித நேய குழுக்களின் தலைவர்களும் இந்த கமிட்டியில் உறுப்பினர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர்  உடனடியாக கேரள மக்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது என்பது குறித்து முடிவு செய்து அதை உடனயாக செய்யத் தொடங்குவார்கள் என் அதிபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக His Highness Sheikh Mohammed   தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கோனோர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்… இதற்காக தாம் மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் கேரள சகோதரர்களே கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்… உங்களுக்கு உதவி செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.