We are IIT IIM. Creating Pakistan creates terrorists - Susma Swaraj

நாங்கள் ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் ஆகியவற்றை உருவாக்குகிறோம். ஆனால், பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க், ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது என்று ஐ.நா. அவையில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் 72-வது ஆண்டுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். சனிக்கிழமை ஐ.நா. அவையில் சுஷ்மா இந்தியில் உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தான் குறித்தும், தீவிரவாதம் குறித்தும் கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது-

நாங்கள் மருத்துவர்களை, ஆய்வாளர்களை, பொறியாளர்களை உருவாக்குகிறோம். ஆனால், நீங்கள்(பாகிஸ்தான்) என்ன உருவாக்குகிறீர்கள்?. நீங்கள் தீவிரவாதிகளை உருவாக்குகிறீர்கள்.

மருத்துவர்கள் மக்களை இறப்பில் இருந்து காக்கிறார்கள். ஆனால், தீவிரவாதிகள் மக்களை சாகடிக்கிறார்கள். நாங்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் எய்ம்ஸ், விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்குகிறோம். நீங்கள் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹக்கானி நெட்வொர்க், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாதிகளை உருவாக்குகிறீர்கள்.

நான் பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் சொல்ல விரும்புவது எல்லாம், நீங்கள் உங்களுக்குள் ஆய்வு செய்யுங்கள். இந்த உலகில் இந்தியா ஐ.டி தொழில்நுட்பத்தில் வலிமையாக அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அங்கீகாரத்தையே பெற்றுள்ளது.

கொடிய தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் முதன்மையான இடமாக பாகிஸ்தான் இருக்கிறது. இந்த உலகிற்கும், சொந்த மக்களுக்கும் தீவிரவாதத்தை தவிர்த்து பாகிஸ்தான் என்ன வழங்கி இருக்கிறது?.

நாங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். நாங்கள் முழுமையாக எங்கள் நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்க போராடி வருகிறோம். ஆனால், அண்டை நாடு பாகிஸ்தான் எங்களுடன் எப்போதும் போர்புரிவதையே வழக்கமாக வைத்துள்ளது.

நாங்கள் தீவிரவாதத்தை நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம் என்றும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுறோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் குற்றம்சாட்டி நேரத்தை செலவு செய்துவிட்டார்.

அழிவையும், சாவையும், மனிதத்தன்மையற்ற செயலையும் உலகினுக்கு ஏற்றுமதி செய்யும் நாடு, போலித்தனத்தின் சாம்பியனாக இருக்கும் நாடு இந்த அவையில் இருந்து கொண்டு மனித நேயத்தை பற்றி பாடம் நடத்த தேவையில்லை.

கடந்த 2015ம் ஆண்டு நான் இஸ்லாமாபாத் நகருக்கு வந்த பின், இந்தியா பல்வேறு முயற்சிகள் எடுத்த பின்பும், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப்பேச்சு ஏன் தடைபட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர் சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிகரடனம் ஆகியவற்றை மறந்துவிட்டார். இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே நிலுவையில் இருக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேச்சு மூலம் தீர்க்க வேண்டும்.

முகமது அலி ஜின்னாவின் வெளியுறவுக்கொள்கை அமைதி, நட்பின் அடிப்படையிலானது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். அவர் செய்தாரா இல்லையா என்பது வரலாற்றுக்கு மட்டுமே தெரியும். ஆனால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்திய பிரதமர் மோடி, தான் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தானிடம் அமைதியையும், நட்பையும் பாராட்டி வருகிறார்.

ஊழலுக்கு எதிரான ரூபாய் நோட்டு தடை, வறுமை ஒழிப்பு நடவடிக்கை, பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகிய பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.