மூட நம்பிக்கையை உடைக்கும் சித்தராமையா! சட்டப்பேரவையில் வாஸ்துவால் அடைக்கப்பட்ட கதவுகள் திறப்பு!
1998ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மூடப்பட்ட மாநில சட்டமன்றத்தின் தெற்கு வாசல் கதவை சித்தராமையா இரண்டாவது முறையாகத் திறந்து வைத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமையன்று மாநில சட்டமன்றத்தில் உள்ள தனது அறைக்குச் செல்ல தெற்கு வாசல் கதவைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
1998ல் அப்போதைய முதல்வர் ஜே.எச்.படேல் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, கர்நாடக மாநில சட்டப்பேரவையான விதான் சவுதாவின் தெற்கு வாசல் கதவு மூடப்பட்டது. பின்னர், 2013ல் சித்தராமையா முதல்வர் ஆன பிறகு, அந்தக் கதவைத் திறக்க உத்தரவிட்டார். அதுவரையான 15 ஆண்டுகளில் ஆறு முதல்வர்கள் பதவியேற்றனர். ஆனால் யாரும் அந்தக் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
2018ல் சித்தராமையாவின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்டி குமாரசாமி, பாஜகவின் பிஎஸ் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகிய மூன்று பேர் முதல்வராக இருந்துள்ளனர். அவர்களும் தெற்கு வாசல் கதவை பயன்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் இரண்டாவது முறையாக முதல்வரான சித்தராமையா இன்று மீண்டும் அந்தக் கதவைத் திறந்துள்ளார்.
முதலமைச்சரின் அறை விதான சவுதாவின் மூன்றாவது மாடியில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள்கூட தெற்கு வாசல் கதவை துரதிர்ஷ்டவசமானது என்று கருதி, அதற்குப் பதிலாக மேற்கு வாசலையே பயன்படுத்த விரும்புகிறார்கள். தெற்கு வாசல் வாஸ்து விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்பதுதான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 2019ஆம் ஆண்டு நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு தனது பெயரின் ஆங்கில உச்சரிப்பை 'Yeddyurappa' என்பதிலிருந்து 'Yediyurappa' என்று மாற்றிக் கொண்டார். நியூமராலஜி வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு பெயரின் உச்சரிப்பை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூடநம்பிக்கை கொண்டவர் என்று பிரதமர் மோடி விமர்சித்தார். தான் எங்கு வசிப்பது என்பதில் இருந்து யாரை அமைச்சராக என்பது வரை அனைத்து முடிவுகளும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடி குறைகூறினார்.