காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதால், எதிர் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் நிகழ்த்தும் என்பதால் இந்தியா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது, இன்று காலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது.

புல்வாமாவில் தாக்குதலுக்கு பின், இந்திய அளித்த பதிலடியில் பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200- 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட், முசாபர்பாத், சக்கோட்டி பகுதிகளில் நடந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் எந்த நேரமும் பதிலடி தாக்குதல் நிகழ்த்தலாம் என்பதாலும் போர் மூள வாய்ப்பு அதிகம் இருப்பதாலும்,  பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என கூறப்படுகிறது. மேலும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லையோரம் பதற்றம் நிலவுவதால் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது.