வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 3-வது கட்ட தேர்தல் 116 மக்களவை தொகுதிகளில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்துவதற்கு முன்னதாக காந்திநகருக்கு சென்ற பிரதமர் அவரது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். மோடிக்கு தாயார் ஆசி வழங்கி இனிப்பு ஊட்டினார். இதனையடுத்து மோடி அகமதாபாத்துக்கு சென்று அங்குள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி இந்தியாவில் நடக்கும் ஜனநாயக திருவிழாவில் நான் ஒரு வாக்காளராக எனது கடமையை நிறைவேற்றினேன். சொந்த தொகுதியில் ஓட்டளித்த நான் ஒரு அதிர்ஷ்டசாலி. கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதை போல, வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் அதனை உணரலாம். 

அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இந்திய வாக்காளர்கள் அறிவில் சிறந்தவர்கள். அனைவரும் வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்றார். மேலும் தீவிரவாதிகளிடம் இருக்கும் ஐஇடி - கண்ணிவெடிகுண்டை விடவும், வாக்காளர்களின் கையில் இருக்கும் வோட்டர் ஐடி வாக்காளர் அடையாள அட்டை மிகவும் சக்தி வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.