‘மொய் வேண்டாம்; மோடிக்கு வாக்களியுங்கள்’: திருமண பத்திரிகை மூலம் நூதன வாக்கு சேகரிப்பு!
மொய் வேண்டாம்; மோடிக்கு வாக்களியுங்கள்’ என நூதன முறையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் சமயம் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மொய் வேண்டாம்; மோடிக்கு வாக்களியுங்கள்’ என நூதன முறையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்திகாந்தி நரசிம்மலு என்பவரின் மகனுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு திருமண நிகழ்ச்சிக்கு வரவுள்ள விருந்தினர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு வருகை புரியும் விருந்தினர்கள் ஆடம்பரமான பரிசுகளைத் தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக, நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது தாங்கள் வழங்கக்கூடிய சிறந்த பரிசாக இருக்கும் எனவும் திருமணப் பத்திரிகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அவர் அச்சிட்டுள்ளார்.
Loksabha election 2024 பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய்: யார் இவர்?
நரசிம்மலுவின் ஒரே மகன் சாய் குமாருக்கும், மஹிமா ராணி எனும் பெண்ணுக்கும் ஏப்ரல் 4ம் தேதி படன்செருவில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான திருமண பத்திரிக்கையில்தான் அவர் இவ்வாறு அச்சிட்டுள்ளார். இந்த யோசனையை குறித்து அவர் பேசுகையில், இந்த ஐடியா முற்றிலும் என்னுடையது. இதனை என்னுடைய குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் ஓகே சொல்லி விட்டனர் என்கிறார்.
நரசிம்மலு செய்தது போன்று திருமண பத்திரிகைகளில் வாக்கு சேகரிப்பது இது முதன்முறை அல்ல. 2019ஆம் ஆண்டு தேர்தல் சமயத்திலும், திருமணத்திற்கான ஆடம்பரமான பரிசுகளைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக மோடிக்கு வாக்களிக்குமாறு விருந்தாளிகளை பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்கள் தாங்கள் நடத்திய திருமண நிகழ்ச்சிகளில் கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் தனது மகனின் திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு அச்சிட்டு விருந்தினர்களிடம் கேட்டு கொண்ட நபருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, அதற்குட்பட்டுத்தான் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இல்லையென்றால் அது நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.