புனே மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் நிலம், வெளிநாட்டு சுற்றுலா, கார்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி வாக்காளர்களைக் கவர்கின்றனர். மறுபுறம், தாக்கரே சகோதரர்கள் கூட்டணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாநகராட்சித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் வினோதமான மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர்.
குலுக்கல் பரிசுப் போட்டி
தேர்தல் களம் தற்போது "பரிசுப் போட்டி" களமாக மாறியுள்ளது. குறிப்பாக, லோஹகான்-தானோரி வார்டு வேட்பாளர் ஒருவர் 'அதிர்ஷ்டக் குலுக்கல்' மூலம் 11 வாக்காளர்களுக்கு தலா 1,100 சதுர அடி நிலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
விமான் நகரில் ஒரு வேட்பாளர் தம்பதியினருக்கு 5 நாட்கள் தாய்லாந்து சொகுசுச் சுற்றுலா வழங்க முன்வந்துள்ளார்.
மற்ற வார்டுகளில் எஸ்.யு.வி (SUV) கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என வேட்பாளர்கள் வாக்குறுதிகள் அளித்துள்ளனர்.
பெண்களைக் கவரும் சேலைகள்
பெண் வாக்காளர்களைக் குறிவைத்து, பல்லாயிரக்கணக்கான பைதனி பட்டுச் சேலைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர தையல் இயந்திரங்கள், சைக்கிள்களும் வழங்கப்படுகின்றன
இளைஞர்களைக் கவர ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகின்றன.
இணையும் பவார் குடும்பம்?
தேர்தல் களம் ஒருபுறம் சூடாக இருக்க, மறுபுறம் அரசியல் கூட்டணிகளும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) இரு பிரிவுகளான சரத் பவார் மற்றும் அஜித் பவார் தரப்பு, இடப்பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத் பவார் தரப்பு 40-45 இடங்களைக் கோருகிறது. ஆனால், அஜித் பவார் தரப்பு 30 இடங்களுக்கு மேல் கொடுக்கத் தயாராக இல்லை.
இது குறித்த இறுதி முடிவை சரத் பவாரின் மகளும், செயல் தலைவருமான சுப்ரியா சுலே எடுப்பார் எனத் தெரிகிறது.
தாக்கரே சகோதரர்கள் கூட்டணி
மகாராஷ்டிர அரசியலில் மற்றொரு முக்கிய திருப்பமாக, 20 ஆண்டுகாலப் பகைக்குப் பிறகு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும் கைகோர்த்துள்ளனர். சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) இடையிலான இந்தத் திடீர் கூட்டணி, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான 'மகா விகாஸ் அகாடி' (MVA) கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இந்தத் தேர்தலுக்கு மட்டும் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளது.
பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் புனே தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

