ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஊர்வலத்தில் ஜெகன் மோகனின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த சத்தேனப்பள்ளி அருகே அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் மத்தியில் தனது காரில் ஊர்வலமாகச் சென்றார். தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் நிகழ்ச்சியின் இடையே ஒரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. வாகன பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சீலி சிங்கையா என்ற 54 வயது தொண்டர் ஒருவது தனது கட்சித் தலைவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக்கில் தடுப்புகளை மீறி சாலையின் ஊடே வந்துள்ளார்.

தொண்டரின் திடீர் வருகையை எதிர்பாராத பேரணி வாகனம் ஒன்று தொண்டரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி அங்கிருந்து கடந்துச் சென்றுள்ளது. விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விபத்தில் சிக்கிய தொண்டர் சீலி தலையில் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், முன்னாள் முதல்வர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பேரணி, ஊர்வலங்களில் பொதுமக்களின் கூட்டம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிடாமல் விட்டதே இதுபோன்ற அசம்பாவிதத்திற்கு காரணம். பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்திற்கான காரணம் அரியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இதனிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்த தொண்டரின் உறவினர்கள் விபத்து தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.