விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் வாங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிர்ஸ் தொழிற்சாலையில் இன்று அதிகாலை  விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு  பரவியது. இதனால், 5 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சாலைகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலை இருக்கும் சுற்று வட்டாரப்பகுதியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், விலங்குகளும் தப்பவில்லை. ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் வாயில் துரை தள்ளியபடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி முழு விவரங்களை கேட்டறிந்தார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அவர் உறுதி அளித்தார். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் விஷ வாயுக்கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வாங்கப்படும் என அறிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.