கங்கனாவின் கன்னத்தில் அறைந்த கான்ஸ்டபிளுக்கு வேலை! கேரண்டி கொடுத்த பாடகர் விஷால் தத்லானி!
“நான் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அந்தக் காவலரின் தனிப்பட்ட கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு ஒரு வேலை காத்துக்கொண்டிருக்கிறது என்ற உறுதியை அளிக்கிறேன்" என்று விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்.
சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிளுக்கு வேலை கொடுப்பதாக பாலிவுட் பாடகர் விஷால் தத்லானி உறுதி அளித்துள்ளார்.
நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, கங்கனாவை அடித்தவர் விமான நிலையத்தில் பணியில் இருந்த குல்விந்தர் கவுர் என்று தெரியவந்தது.
கங்கனா, விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதால்தான் அவரை பெண் காவலர் அறைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கங்கனாவுக்கு ஆதரவாகவும், பெண் காவலருக்கு ஆதரவாகவும் பல நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனிடையே, பஞ்சாப் விவசாயிகளும் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் போலீஸார் பெண் காவலர் குல்விந்தர் கவுர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தனது வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “நான் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அந்தக் காவலரின் தனிப்பட்ட கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்கு ஒரு வேலை காத்துக்கொண்டிருக்கிறது என்ற உறுதியை அளிக்கிறேன்" என விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக "ஜெய்ஹிந்த். ஜெய் ஜவான். ஜெய் கிசான்" என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். விஷால் தத்லானியின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவருக்கு வேலை அளிக்க முன்வந்த விஷாலுக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.