விசாகப்பட்டினத்தில் உள்ள நிறுவனமான எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். 

இந்த விஷவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கும், மாநில மற்றும் தேசிய பேரிடர்  மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விஷவாயுவை சுவாசித்த ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் வாயில் துரை தள்ளியபடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த முதல்வர் ஜெகன்மோன் ரெட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில்;- விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும்,  விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.