பைக் உரிமையாளர் மைசூரில் இருந்து குண்டக்கல் பகுதியில் உள்ள நெட்டிகண்டி ஆஞ்சிநேய சுவாமி கோயிலுக்கு மோட்டார்சைக்கிளிலேயே வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆனந்தபூர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விசாரணையில் பைக் உரிமையாளர் மைசூரில் இருந்து குண்டக்கல் பகுதியில் உள்ள நெட்டிகண்டி ஆஞ்சிநேய சுவாமி கோயிலுக்கு மோட்டார்சைக்கிளிலேயே வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. புது மோட்டார்சைக்கிளை வாங்கியதும், அதன் உரிமையாளரான ரவிசந்திரா சுமார் 387 கிலோமீட்டர்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்துள்ளார். புது மோட்டார்சைக்கிளின் என்ஜினை எங்கும் நிறுத்தாமலேயே அத்தனை தூரம் ஓட்டி வந்துள்ள ரவிசந்திரன் அதனை கோயில் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
பாதிப்பு:
அவர் கோயிலின் உள் சென்றதும் பைக் தீப்பிடிக்க தொடங்கியது. பின் மோட்டார்சைக்கிள் முழுக்க தீப்பிடித்து எரிந்து. இதனால் பைக்கின் பெட்ரோல் டேன்க் வெடித்து சிதறியது. பின் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் திடீரென வெடித்ததற்கான காரணம் மர்மமாமகவே உள்ளது. இந்த சம்பவம் காரணமாக பைக் தவிர வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பெட்ரோலில் இயங்கும் பைக், அதுவும் ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலெக்ட்ரிக் வாகனங்கள்:
சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பியூர் இ.வி. உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்தது. இதே போன்று சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியது. சென்னையிலும் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.

மாத்தூர் சுங்க சாவடி அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியேறியது, அதன் பின் ஸ்கூட்டர் முழுக்க மளமளவென தீப்பிடிக்க துவங்கியது. மார்ச் 28 ஆம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூனேவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி, இணையத்தில் வெளியானது.
பாதுகாப்பு:
இத்துடன் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அச்சத்தை பெருமளவு அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தரம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
