‘பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல தோற்றமளிக்கிறார்’ என தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவரும் நடிகருமான விஜயசாந்தி பேசியது சர்ச்சையாகி உள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் விஜயசாந்தியும் பங்கேற்றார். அப்போது ராகுல் முன்னிலையில் பேசிய விஜயசாந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கி பேசினார். 
 

“எந்த நிமிடத்தில் எந்தக் குண்டை பிரதமர் மோடி போடுவார் என்ற அச்சத்துக்கு அனைவரும் ஆளாகி உள்ளனர். அவர் ஒரு தீவிரவாதியைப் போல தோற்றமளிக்கிறார். மக்களை நேசிப்பதற்கு மாறாக அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார். பிரதமருக்கான பண்புகள் இதுதானா? பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார். மக்களை துன்புறுத்தி ஜனநாயகத்தை கொலை செய்ய பார்க்கிறார். இதே போன்ற அடுத்த 5 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்ய நினைத்தால், மக்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்” என்று பேசினார்.
பிரதமர் மோடி தீவிரவாதி போல இருக்கிறார் என்று விஜயசாந்தி விமர்சித்ததால். அது சர்ச்சையாகி இருக்கிறது. விஜயசாந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர்.