கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஜாமீனில் வெளிவந்த தவெக நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார். 19 நாட்களுக்குப் பிறகு பனையூர் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக ஜாமீனில் வெளியே வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கரூர் மாவட்ட நிர்வாகிகளை, அக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். கரூர் சம்பவம் நடந்த 19 நாட்களுக்குப் பிறகு, விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்துள்ளார்.
சென்ற மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜாமீனில் வந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு
வழக்குப்பதிவுக்குப் பிறகு ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாகினர். ஆனால், மாவட்டச் செயலாளர் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவான மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் தவெக நகரச் செயலாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இன்று (வியாழக்கிழமை) திருச்சி மத்திய சிறை வாசலில் ஜாமீனில் வெளியே வந்த அவர்களுக்குத் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டு, தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சந்தித்தனர்.
வருத்தம் தெரிவித்த விஜய்
இந்தச் சந்திப்பிற்காகவே, கரூர் துயரச் சம்பவம் நடந்து 19 நாட்களுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு இன்று முதல்முறையாக வந்திருந்தார்.
சரணடைந்த நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யைச் சந்தித்துள்ளனர். அப்போது, சிறையில் இருந்தபோது தன்னால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை என விஜய் வருத்தம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிறையில் அவர்கள் எப்படி இருந்தார்கள், என்னென்ன நடந்தது என விஜய் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு கட்சி அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, தவெகவினர் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
