கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொகுசு மாளிகையை ரூ.73 கோடிக்கு இந்தி நடிகரும், இளம் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி(வயது33) வாங்கி உள்ளார். இந்த தகவலை பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஏலம்விட முடிவு

பல்ேவறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவானார். இதையடுத்து, மும்பை, கோவா நகரங்களில் இருக்கும் இவரின் சொகுசு பங்களாக்களை ஏலம் விட்டு தொகையை மீட்க ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிக் கூட்டமைப்பு முடிவு செய்தன.

யாரும் வரவில்லை

இதையடுத்து 17 ஆயிரம் அடி பரப்பளவு கொண்ட மும்பையில் உள்ள ‘கிங்பிஷர்’ இல்லத்தின் விலை ரூ.150 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த வீட்டை ஏலம் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை.

விலைகுறைப்பு

இதேபோல, கோவாவில் கண்டோலிம் பகுதியில் உள்ள சொகுசுபங்களாவையும் ஏலத்தில் விடப்பட்டது. இதன் தொடக்க விலை ரூ.81 கோடியாக வைக்கப்பட்டது. ஆனால், இந்த தொகைக்கு ஏலம் எடுக்க ஒருவரும் வரவில்லை. இருமுறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

தொகை குறைப்பு

இதையடுத்து, ஏலத்தின் அடிப்படை விலையை 10 சதவீதம் குறைத்து, மும்பை இல்லத்தை ரூ.103.5 கோடியும், கோவா இல்லம் ரூ.73 கோடியாக குறைக்கப்பட்டது.

ரூ.73 கோடி

கோவா சொகுசுவீட்டின் விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்தி நடிகரும், தொழிலதிபருமான சச்சின் கிஷோர் ரூ. 73 கோடிக்கு வாங்கியுள்ளார். இளம் தொழிலதிபரான சச்சின் கிஷோர் ஊடக நிறுவனம் ஒன்றையும், இந்தி திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமும், இணையதளமும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “விஜய் மல்லையாவின் கோவா சொகுசு பங்களா விற்பனை செய்யப்பட்டுவிட்டது. யாருக்கு என்பதை நான் கூற முடியாது’’ எனத் தெரிவித்துவிட்டார்.