வங்கியில் கடன் பெற்றுதிருப்பிச் செலுத்தாமல் லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாம் மோசடிக்காரர் என்று குற்றம்சாட்டுகிறோம், ஆனால், மல்லையா வசிக்கும் கிராமத்தினர், மல்லையா எங்களின் சொத்து, அவரை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் எனத் தெரிவிக்கின்றனர்.

 பல்வேறு வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரைப் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கியும், ஜாமீனில் விடமுடியாத கைது வாரண்ட்டையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, அடுத்த ஒரு மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

 இந்நிைலயில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மத்திய அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

 லண்டன் நகரம்  அருகே 40 கி.மீ தொலைவில் உள்ள டெவின் எனும் கிராமத்தில் மல்லையா வாழ்ந்து வருகிறார். அந்த கிராம மக்கள் விஜய் மல்லையாவை ஒரு ஹீரோ போலவும், சொத்தாகவும் கருதுகிறார்கள். இந்தியாவில் வங்கிகளிடம் இருந்து பணத்தை மோசடி செய்து லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையா இன்னும் தனது பகட்டையும், செல்வச்செழிப்பையும் கைவிடாமல், தாராளமாகச் செலவு செய்து வருகிறார்.

 அவர் வாழ்ந்து வரும் டெவின் கிராமத்துக்கு கிறிஸ்துமஸ்  பண்டிக்கைகாக, பிரமாண்டமாக கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். விஜய் மல்லையாவின் இந்த பரிசால் ெடவின் கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் மக்கள் மத்தியில் விஜய் மல்லையா ஒரு ஹீரோ போல பார்க்கப்பட்டு வருகிறார்.

 இது குறித்து டெவின் கிராமத்தைச் சேர்ந்த ரோஸ் அன்ட் கிரவுன் கிளப்பில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், “ விஜய் மல்லையா எங்களின் சொத்து, அவருடன் நாங்கள் இந்த கிராமத்தில் வாழ்வதை மகிழ்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறோம். பார்முலா ஒன் கார்பந்தயத்தில் ஈடுபாடோடு இருக்கிறார், கார்பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டன் மல்லையாவுக்கு இந்த பாரில்தான் பீர் விருந்து அளித்தார்.

 அதுமட்டுமா, இந்த கிராமத்துக்கு ரூ.13 லட்சத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை பரிசாக மல்லையா அளித்துள்ளார் .  எங்களின் கிராமத்தில் மல்லையா போன்ற பெரும் பணக்காரர் வாழ்வதை பெருமையாக கருதுகிறோம். அவர் சில பிரச்சினையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

 ஆனால், பெரிய மனிதர்கள் என்றாலே சிக்கல் இருக்கத்தானே செய்யும். அவரை நாங்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல விடமாட்டோம். அவரை கடவுள் ஆசிர்வதிப்பார், விரைவில் எங்களின் பாருக்கு வருவார்” என பெருமையாக தெரிவித்தார்.

 விஜய் மல்லையா லண்டனில் டெவின் கிராமத்தில் ரூ.62 கோடிக்கு தோட்டத்துடன் கூடிய வீடு வாங்கியுள்ளார். இந்த வீடு எப்.ஓன் கார்பந்தியத்தில் முன்னணி வீரரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டனின் தந்தையின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

 டெவின் கிராமத்தில் உள்ள பம்ப்கின் கேபே ஓட்டலின் அதிபர் கூறுகையில், “ விஜய் மல்லையா அடிக்கடி, இங்குதனது மனைவி, குழந்தைகளுடன் வருவார். அவர் ஒருபோதும் தன்னை ஒரு பெரிய பணக்காரர் போல காட்டிக்கொண்டது இல்லை. மிகவும் எளிமையாக இருப்பார், பழகுவார். அவர் மீது இந்தியாவில் சில வழக்குகள் இருப்பது எங்களுக்கு தெரியும். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்படியே அவரை வாழவிடுங்கள், இந்தியாவுக்கு அழைக்காதீர்கள்” என்றார்.