சூரத்தில் 10வது மாடியில் இருந்து தூக்கத்தில் தவறி விழுந்த 57 வயது முதியவர், 8வது மாடி ஜன்னல் கம்பியில் கால் சிக்கியதால் தலைகீழாகத் தொங்கினார். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அவரைப் பத்திரமாக மீட்டனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர், இரண்டு மாடிகள் கீழே இருந்த ஜன்னல் கம்பியில் கால் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சூரத்தின் ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள 'டைம்ஸ் கேலக்ஸி' (Times Galaxy) அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நிதின்பாய் அதியா (57). நேற்று காலை 8 மணியளவில் அவர் தனது 10-வது மாடி வீட்டின் ஜன்னல் அருகே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தூக்கத்திலேயே ஜன்னல் வழியாக வெளியே உருண்டு விழுந்துள்ளார்.

நிமிட நேர அதிர்ஷ்டம்

கீழே விழுந்த அவர் நேராகத் தரையில் மோதியிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அவர் கீழே விழும்போது அவரது கால் 8-வது மாடியில் இருந்த வீட்டின் ஜன்னல் இரும்புக் கம்பிகளுக்குள் (Grille) பலமாகச் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் தலைகீழாக அந்தரத்தில் தொங்கத் தொடங்கினார்.

அவர் அந்தரத்தில் தொங்குவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஜஹாங்கீர்புரா, பாலன்பூர் மற்றும் அடாஜன் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்தனர்.

Scroll to load tweet…

சவாலான மீட்புப் பணி

மீட்புப் பணியின் போது அவர் ஒருவேளை வழுக்கி விழுந்தால் பிடிப்பதற்காக, தரைத்தளத்தில் தீயணைப்பு வீரர்கள் பெரிய பாதுகாப்பு வலையைப் பிடித்துக் கொண்டு நின்றனர்.

வீரர்கள் 10-வது மாடியில் இருந்து கயிறுகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி அவரை முதலில் நிலைநிறுத்தினர்.

பின்னர் ஹைட்ராலிக் கட்டர் மூலம் ஜன்னல் கம்பிகள் கவனமாக வெட்டப்பட்டு, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டார்.

காலில் எலும்பு முறிவு

மீட்கப்பட்ட நிதின்பாய் அதியா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குக் காலில் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துணிச்சலான மீட்புப் பணி குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.