Vijay Mallya is kidnapped in the country as soon as possible - the green light in the UK

வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டு, நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

லண்டனில் மல்லையா வசிக்கும் வெஸ்ட் மினிஸ்டர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய அரசின் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்து, நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆதலால், மிகவிரைவில் மல்லையா இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது.

ரூ.9 ஆயிரம் கோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்தக்கோரி ஸ்டேட் வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடினார்.

பிடிவாரண்ட்

அங்கிருந்த படியே தனது மாநிலங்கள் அவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் விஜய்மல்லயாவுக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டது. அவரின் பாஸ்போர்ட்டையும் நீதிமன்றம் முடக்கி, நாடு கடத்த உத்தரவிட்டது.

பேச்சு

இதையடுத்து, விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தும் பணியை மத்திய அரசுத் தொடங்கியது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம், இங்கிலாந்து தூதரிடம் பேச்சு நடத்தப்பட்டது. அந்த பேச்சின் முடிவாக இப்போது மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு தொடங்கி உள்ளது

கோரிக்கை ஏற்பு

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால்பாக்லே நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது என கடந்த 21-ந்தேதி எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கை

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மூலம், மல்லையா வசிக்கும் வெஸ்ட்மினிஸ்டர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற நீதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையே கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து தூதரிடம் கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முறைப்படி கோரிக்கை மனுவை அளித்தது.

பணி தொடக்கம்

மல்லையாவுக்கு எதிராக இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எங்களின் இந்த கோரிக்கையை இங்கிலாந்து ஏற்றுக்கொண்டு பரிசீலித்தால், எங்களின் கவலைகளை இங்கிலாந்து அரசு புரிந்துகொண்டதாக அமையும் எனத் தெரிவித்தோம். இதன்படி இப்போது மல்லையாவை நாடுகடத்தும் பணி தொடங்கி இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

பல கட்டங்கள்

இதற்கிடையே மல்லையாவை நாடுகடத்தும் செயல்பாடு என்பது பல்வேறு கட்டங்களைக் கொண்டதாகும். அதாவது, அந்த மாவட்ட நீதிபதி மல்லையாவை கைது செய்ய ஆணை பிறப்பித்தால், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் முதல்கட்ட விசாரணைக்கு நிறுத்தப்படலாம். அதைத்தொடர்ந்து மல்லையா மேல்முறையீடு செய்ய விரும்பினால், அந்த வழக்கில் இறுதி முடிவு எட்ட உச்ச நீதிமன்றம் வரை கூட செல்லலாம்.