தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கோவா சொகுசு பங்களாவை ஏலத்தில் எடுக்க நேற்று ஒருவர் கூட வரவில்லை. இதனால், 2-வது முறையாக இணையதளம் மூலம் வங்கிகள் நடத்திய ஏலம் ஏமாற்றத்துடன் முடிந்தது.

சாராய சக்கரவர்த்தியான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார். மாநிலங்களவை எம்.பி.பதவியையும் மல்லையா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரின் பாஸ்போர்ட்டை அரசு முடக்கி, அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்தது. பல்வேறு பணமோசடி வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத ஆணையை மல்லையாவுக்கு எதிராக பிறப்பித்தது.

இதற்கிடையே ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக மல்லையாவுக்கு சொந்தமாக, கோவா, கன்டோலிம் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவை வங்கிகள் கையகப்படுத்தின. ஏறக்குறைய 12 ஆயிரத்து 350 சதுர பரப்பளவு கொண்ட இந்த சொகுசு பங்களாவில்தான் மல்லையா பல விருந்துகளையும், உல்லாச கொண்டாட்டங்களையும் நடத்தியிருந்தார்.

கடற்கரையை நோக்கி அமைந்திருக்கும் இந்த சொகுசு பங்களாவை ஏலம் விட்டு, அதில் வரும் தொகையை கடன்மீட்பாக வைக்க வங்கிகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த சொகுசு பங்களாவுக்கு அடிப்படை விலையாக ரூ. 150 கோடி நிர்ணயித்து முதலில் ஏலம் விடப்பட்டது. ஆனால், இந்த விலைக்கு ஏலம் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை.

இந்நிலையில், 2-ம் கட்டமாக விலையை ரூ.85.3 கோடியாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, இணையதளத்தில் நேற்று வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஏலம் விடப்பட்டது. ஆனால், இந்த அடிப்படை விலைக்கு கூட சொகுசுபங்களாவை ஏலம் எடுக்க ஒருவர் கூட விருப்பம் தெரிவிக்கவில்லை.

இது குறித்து வங்கிகள் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மல்லையாவின் சொகுசு பங்களாவை ஏலம் எடுக்க ஒருவர் கூட முன்வரவில்லை. ஆதலால் கிங்பிஷர் சொகுசுபங்களா ஏலம் விடும் முயற்சி வீணாணது. ரூ.85 கோடி அடிப்படை விலை அதிகமாக இருந்ததால், ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை'' எனத் தெரிவித்தனர்.