கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் 20-வது ஆண்டு நினைவாக ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினாவில் போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் த்ராஸ் போர் நினைவுச் சின்னத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் விமானத் தளபதி மார்சல் பீரண்டர் சிங் தானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

கார்கில் போர் வரலாறு;

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படர்ந்த இமயமலை உள்ளது. இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கி கைப்பற்றிவிடலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்தனர். 

1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்களால் இருநாட்டு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை உருவானது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டிருந்தனர். ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

முதலில் இந்திய ராணுவம் அவர்கள் முஜாஹிதீன் தீவிரவாதிகள் என்று நினைத்தனர். பின்பு பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமாக கொன்றனர். முதலில் தீவிரவாதிகள் வேலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.

தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு வீரர்கள் தயாரானார்கள். தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போர் நடைபெற்றபோது அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அப்போது கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் துருப்புகளையும் தீவிரவாதிகளையும் இந்திய எல்லைகளில் இருந்து ஒழிப்பதற்காக ஆபரேஷன் விஜய் நடத்தப்பட்டது. இந்த கார்கில் போர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 1999-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை நடைபெற்றது.

பிறகு பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த போரில் 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். முதலில் 357 வீரர்களை தான் இழந்தோம் என தெரிவித்த பாகிஸ்தான் பிற்காலத்தில் 4000 பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை ஒத்துக் கொண்டனர். இந்நிலையில், ஆபரேஷன் விஜய் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 26-ம் தேதியில் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கார்கில் விஜய் திவாஸ் நினைவு தினம் இந்தியாவால் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.