venkaiha naidu and gopala krishna gandhi nominating today

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளனர். 

துணை குடியரசுத்தலைவர் திரு.ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், துணை குடியரசுத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, தேசிய காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கோபாலகிருஷ்ண காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

இதே போன்று பாஜக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அவர், தேர்தலில் போட்டியிடுவதையொட்டி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.