அ.இ.அ.தி.மு.க. கட்சியில் தற்போது எழுந்துள்ள உட்கட்சி சிக்கலுக்கும், மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும், பங்கும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர் செல்வம், தற்காலிக முதல்வராக பொறுப்பு ஏற்று இருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வி.கே.சசிகலா அடுத்த சில நாட்களில் முதல்வராக பொறுப்பு ஏற்பதாக அந்த கட்சியின் சட்டமன்றக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, முதல்வர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினமா செய்தார்.
இந்நிலையில், எதிராக நேற்று முன்தினம் போர்க்கொடி உயர்த்தினார். தன்னை பலவந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் பெற்றனர் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதனால், அ.தி.மு.க. கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, இரு அணிகளாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு அ.தி.மு.க தொண்டர்கள் தி.மு.க.வும், பாரதிய ஜனதா கட்சியும் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு மறுத்துள்ளார். இது குறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது-
அ.இ.அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, பங்கும் இல்லை
இந்த விவகாரம் அந்த கட்சியின் உட்கட்சி பிரச்சினை, அதில் நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.
அதேசமயம், மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகை தாமதம் ஆவது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.
ஆனால், எங்களைப் பொறுத்தவரை, ஆளுநர் வித்யாசாகர்ராவ் சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்து, அரசியலமைப்பு சட்டத்தின் உதவியுடன், சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பார்.
முதல்வர் ஓ. பன்னீர் செல்வதத்தை பின்புலத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி இயக்குவது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
