நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாக கூறுவது அரசியல் பிரசாரம் என்று குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடு காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் இடையே அமைதியின்மையும், பாதுகாப்பற்ற உணர்வும் நிலவி வருவதாக குடியரசு துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஹமீது அன்சாரி தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள வெங்கய்ய நாயுடு, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாகச் கூறுவது, அரசியல் பிரசாரமே என கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளையும் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே உள்ளனர் என தெரிவித்த வெங்கய்யா நாயுடு,  சிறுபான்மையினருக்குரிய உரிமைகள் அளிக்கப்படுவதாக கூறினார்.

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் இந்திய மக்கள்தான், உலக அளவில் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

இந்தியாவில்  சகிப்புத் தன்மை இருப்பதால்தான், நமது ஜனநாயகம் வெற்றிகரமாக இருக்கிறது என்றும். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படாமல், அனைத்து சமூகத்துக்கும் நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.