இந்தியாவின் புதிய துணை குடியரசு தலைவரை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியது. எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்து வருகின்றனர்.

ஆளும் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான, எதிர்க்கட்சிகளின் சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தியின் பேரனுமான, கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். 

இன்று நடக்கும் தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் வாக்களித்து வருகின்றனர். டில்லியில் உள்ள, நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய ஓட்டு பதிவு, மாலை, 5:00 மணிக்கு நிறைவடையும். அதன்பின், தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண் ணப்பட்டு,இன்று இரவே முடிவு வெளியாகும்.

இந்த நிலையில், தனது வாக்கினை பதிவு செய்யும் முன்  இன்றுசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு,
”அனைத்து உறுப்பினர்களுக்கும் எனக்கு ஆதரவு தருமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனைவரும் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரையும் எனக்கு தெரியும். 

என்னையும் உறுப்பினர்களுக்கு தெரியும். எந்த ஒரு தனிநபரையோ, கட்சியை எதிர்த்தோ நான் போட்டியிடவில்லை. நான் துணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகிறேன். நான் எந்த கட்சியையும் சாராதவன்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் என்னை ஆதரித்துள்ளன. அவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிகை இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.