ராஜ்யசபா தேர்தலில் அகமது பட்டேலுக்கு நான் வாக்கவில்லை என மனம் திறந்து சங்கர்சிங் வகேலா கூறினார்.

குஜராத் மாநிலத்தில் 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி காலியாகிறது. இந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பல்வேறு சோதனைகளை சமாளித்து வருகிறது. இந்த வேளையில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியில் இருந்து 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களை பெங்களூருல் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்தது.

இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில், “நான் அகமது பட்டேலுக்கு வாக்களிக்கவில்லை என, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சங்கர்சிங் வகேலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது.

காங்கிரஸ் கட்சி தோற்க பேகிறது என்பது நன்றாக தெரியும். அப்படி தெரிந்தும் அக்கட்சி வேட்பாளருக்கு யார் வாக்களிப்பார்கள். நான் அகமது பட்டேலுக்கு வாக்களிக்கவில்லை. அவருக்கு 40 ஓட்டுகள் கிடைப்பதே பெரிய விஷயம்.

அகமது பட்டேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சிறிது கூட இல்லை. காங்கிரசில் உள்ள எம்எல்ஏக்கள் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். பட்டேல் சமுதாயத்தினரை வைத்து காங்கிரஸ் விளையாட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.