முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகின் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். அமெரிக்காவுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். 1998-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு தீர்மானிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரும் ஒரு நீண்ட ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர். இவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியாவில் அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் அனுமதி வழங்கினார். இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய்.

 

போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை. போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு, மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்தியா மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் அதையும் மீறி இந்தியாவை 1999 இல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவாக்கியவர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.