உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு: கிளர்க் சஸ்பெண்ட்!
ஆளுநர் வருகையின்போது உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு செய்த உத்தரப்பிரதேச மாநில கிளர்க் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலின் பல்லியா வருகையின் போது இறந்த ஊழியர் ஒருவருக்கு பணி ஒதுக்கியதாக அம்மாநில மருத்துவத் துறையின் எழுத்தர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்லியாவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் பணிபுரிந்த எழுத்தர் பிரிஜேஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டு, அசம்கரில் உள்ள கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயபதி திவேதி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வருகையின் போது இறந்த ஊழியர் ஒருவருக்கு பணியை ஒதுக்கியதன் மூலம் பிரிஜேஷ் குமார் பெருந்தவறு செய்ததாக விஜயபதி திவேதி கூறினார். மேலும், ஆளுநர் நிகழ்ச்சியின்போது, பரிமாறப்பட்ட உணவை பரிசோதிக்கவும் அவர் யாரையும் நியமிக்கவில்லை எனவும் விஜயபதி திவேதி குற்றம் சாட்டினார்.
கேரள அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா!
பிரிஜேஷ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆனந்திபென் படேல் நவம்பர் 26ஆம் தேதியன்று பல்லியாவுக்குச் சென்றிருந்தார்.