சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்களை செய்தது மத்திய அரசு. அதன்படி சாலை விதிகளை மீறி செய்யப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை பலமடங்கு உயர்த்தப்பட்டது. 100, 200 என்று இருந்த அபராத தொகைகள் 3000, 10000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கடந்த 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பலமாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அபராத தொகை அதிகமாக இருப்பதாகவும், இது மக்களை கடுமையாக பாதிக்கும் என்று மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக அரசு நடைபெறும் குஜராத் மாநிலத்தில் அபராத தொகை பல மடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் இந்த சட்டம் குறித்த அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் அபராத தொகையை குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகை 10,000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக குறைந்துள்ளது. அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படவுள்ளது.

இவை தவிர வேறு எந்த அபராத தொகையும் குறைக்கப்படவில்லை என்று அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டிலும் பாஜக அரசு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.