சுரங்க விபத்து: தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்? மாவட்ட ஆட்சியர் தகவல்!
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர் என்பது பற்றி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.
தடைசெய்யப்பட்ட 70% FDC மருந்துகள் இன்னும் விற்பனையில் உள்ளன: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர் என்பது பற்றி உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரோஹில்லா கூறுகையில், “துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் குழாய்களை இடிபாடுகளுக்குள் செலுத்தி உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள்.” என்றார்.
முன்னதாக, தீவிரமாக நடந்து வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையே, நேற்று திடீரென புதிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனிடையே, உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை விரைவாக மீட்கக் கோரி விபத்து நடந்த இடத்தில் மற்ற சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.