மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்திலிருந்து 28 பக்தர்களுடன் உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரியை நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள டாம்டா அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். உடனே விபத்து தொடர்பாக காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் 22 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த 6 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார். 

அதேபோல், பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உஷாராக இருக்க சொல்லும் அமைச்சர்..!