உத்தரகண்டில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக, 20 பேர் வேனில் சென்றுகொண்டிருந்தனர். லோகா காட் அருகே சென்றுக்கொண்டிருந்த போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய வேன் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் விழுந்தவர்களை கயிறுகள் கட்டி மீட்டனர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கனமழை காரணமாக மலைவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.